மலேசிய முருகன் ஆலயத்தை தாக்க திட்டம் தீட்டிய மூவர் கைது!

மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பொலிஸ் துறை அதிகாரி காலித் அபு பக்கர், மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் அமைதியாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய மூவரை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளோம்.
குறித்த மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை செலாங்கர் நகரில் சந்தேகத்தின் பேரில் கடந்த 27ஆம் திகதி கைது செய்தோம். அவரிடம், துப்பாக்கிகள் இருந்தன. அதேபோல் கடந்த 29ஆம் திகதி மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளோம். மலேசியாவில் தாக்குதல் நடத்திவிட்டு, சிரியாவுக்கு தப்பிச் செல்ல குறித்த மூவரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காக சிரியா செல்ல திட்டமிருந்த 68 பேரின் கடவுச்சீட்டுகளை மலேசிய அரசு கடந்த மாதம் மீளப்பெற்றுக்கொண்டது.
அத்துடன், புசாங் நகரில் உள்ள இரவுவிடுதி ஒன்றில் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|