மலேசியாவில் மூவருக்கு மரணதண்டனை!!

Sunday, March 27th, 2016

சர்வதேச மன்னிப்புச் சபையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூன்று தமிழர்களின் மரண தண்டனையை மலேசிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த குணசேகர் பிச்சைமுத்து (35), ரமேஷ் ஜெயகுமார் (34), மற்றும் அவருடைய சகோதரரான சசிவர்ணம் ஜெயகுமார் (37) ஆகிய மூவருக்குமே நேற்று முன்தினம் அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு ஒருவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த மூவரும் தம்முடைய தற்காப்புக்காகவே மேற்படி நபரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் மூவரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவருக்கும் மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சில தினங்களுக்கு முன்னதாக குணசேகரனின் தாயாருக்கு சிறை அதிகாரிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் அவருடைய மகனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதால், அவரை அடக்கம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தனர்.

இந்த மரணதண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனங்களை வெளியிட்டு மரணதண்டனையை ரத்து செய்யுமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி மலேசிய அரசாங்கம் நேற்று மூவரின் மரணதண்டனையும் நிறைவேற்றியுள்ளதாக தற்போது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மூவரின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, வெள்ளிக்கிழமை அதிகாலை 04.30 மணியிலிருந்து 05.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: