மதுபோதையில் சாரத்தியம்: வங்கி அதிகாரிக்கு 75 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்தப்பணி!

Monday, July 30th, 2018

யாழ் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றத்தைப் புரிந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுடன் மதுபோதையில் சாரத்தியம் செய்யும் அனைவரும் சமமாகவே தண்டிக்கப்படுவார்கள் என யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபோதையில் சாரத்தியம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். வங்கி அதிகாரி முன்னிலையான சட்டத்தரணி சந்தேகநபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார் அவரது குற்றத்துக்கு தண்டப்பணம் மட்டும் விதித்து விடுவிக்க வேண்டுமென மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அப்போது கருத்துத் தெரிவித்த நீதிவான் யாழ்;ப்பாணம் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றத்தைச் செய்துள்ளனர். நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும்போதும் மதுபோதையில் சாரத்தியம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக ஆசிரியர்கள், அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட கௌரவமான தொழில்களில் ஈடுபடுவோரும் மதுபோதையில் சாரத்தியம் செய்கின்றனர்.

எனவே அனைவரும் சமமாக தண்டிக்கப்படுவர். இதில் ஆட்சேபனையிருந்தால் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.

அத்துடன் வங்கி அதிகாரிக்கு 7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் 75 மணித்தியாலங்களுக்கு குறையாத சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் வங்கி அதிகாரிக்கு கட்டளையிட்டிருந்தார்.

Related posts: