மதிய உணவுக்கு ஆயத்தமான சிறுவன் மின்னல் தாக்கிச் சாவு: முல்லைத்தீவில் சோகம்!

625.0.560.350.160.300.053.800.668.160.90-1 Tuesday, May 15th, 2018

உணவு உண்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு முத்துஐயன்கட்டில் நடந்துள்ளது.

முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் தரம் 9 இல் கற்கும் பி.தினேஸ்குமார் (வயது 14) என்ற மாணவனே உயிரழந்துள்ளான்.

நேற்றுப் பாடசாலையிலிருந்து வந்த தினேஸ் குமார் உணவு உண்ண சமையல் அறையில் உணவை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.

அயலவர்களின் உதவியுடன் தினேஸ்குமார்  ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். எனினும் மாணவன் உயிரழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாணவனின் தந்தை போரில் உயிரிழந்துள்ளார். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இந்த மாணவனுக்கு பாடசாலை நிர்வாகத்தின் உதவியுடன் அண்மையில்தான் துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. முத்துஐயன்கட்டு, ஜீவநகரில் மின்னல் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். நிலைக் (ஏத்) கோபுரம் இல்லாததே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.