மண்டைதீவு கடலில் தடம்புரண்ட இ.போ.ச பேருந்து! – 16 பேர் காயம்

Thursday, May 26th, 2016
யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது.

மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்.வந்த அரச பேருந்தின் ரயர் வெடித்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதி எல்லை கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்து விபத்து சம்ப வித்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மேற்படி மண்டைதீவு சந்தி பகுதியை அண்மித்ததும் பேருந்தின் முன் சக்கர ரயர் வெடித்துள்ளது.

இதன்காரணமாக ஏற்கனவே அதிவேகத்தில் பேருந்து பயணித்து கொண்டிருந்த நிலையில் ரயர் காற்று போனதன் காரணமாகவும் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஒரத்தில் இருந்த மதகொன்றுடன் மோதி, சுமார் 50 மீற்றர் தூரம் பேருந்து துக்கியெறிப்பட்டு வீதியின் ஒரத்தில் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்குள் விழ்ந்து இவ் விபத்து ஏற்பட்டிருந்தது.

அத்துடன் பேருந்தின் பாகங்கள் பலவும் துக்கியேறியப்பட்டும் இருந்தன.மேலும் பேருந்தில் 45 பயணிகள் வரை பயணித்திருந்ததாகவும் விபத்தில் காயமடைந்த அனைவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருப்பதாவது, குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக 16 பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் 11 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் விபத்தில் பேருந்து சாரதியே படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களது நிலைமை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: