மக்கள் பாவனைக்காக நாளை கையளிக்கப்படுகின்றது ஊரணி பிரதேசம்!

Friday, January 13th, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர் கரையோரப் பகுதி  நாளை சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரணி கடல் பிரதேசத்தில் படகுகளை நிறுத்துவதற்கும், மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வகையிலும் குறித்த பிரதேசம் விடுக்கப்படவுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் குறித்த பகுதி நாளை காலை 9 மணிக்கு யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஆகியோரினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் ஊரணி படகு துறைமுகம், ஊரணி தையிட்டி மேற்கு, மற்றும் நல்லிணக்கபுரம் பகுதி மக்கள் நன்மையடையவுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு குறித்த பகுதி இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்ட நிலையில்   அங்கு தம்மை கடற்றொழில் செய்ய அனுமதிக்குமாறு அப்பகுதி மக்கள் கடந்த 27 வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அத்துடன் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர் . இந்நிலையில் ஊரணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்ததாக கரையோரத்தில் 2 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கரையோரத்தை மட்டுமன்றி தமது குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்க அரசாங்கம் முன்வர வேண்டும். எனவும், 27 வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து விட்ட தாம் இனியாவது சொந்த இடங்களில் குடியேறி நின்மதியாக வாழ வேண்டும் எனவும் ஊரணி மற்றும் மயிலிட்டிப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

vali_north_land_003

Related posts: