மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு!

Saturday, May 8th, 2021

பிரதேசத்தை அல்லது ஓரிடத்தை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ள திட்டமிடல் பிரிவின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் மக்கள் சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தால், கிராமத்தை முடக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதுடன் மக்களின் செயற்பாட்டின் மூலமே கொரோனா தொற்றில் இருந்து மீள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவர் பல்வேறு தரப்பினரை சந்தித்த பின்னர் , யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை திரிவடைந்த வைரசினால் ஏற்படுகின்றது. இப்பொழுது அயல் நாடுகளில் கூட இந்த திரிபடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

குறிப்பாக  20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுகின்றது. அதனால் சுகாதார அமைச்சு பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சரின் பணிப்பின் கீழ்,  இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்கள் தற்பொழுது விஜயம் மேற்கொண்டுள்ளார்கள்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் வடக்கு மாகாணத்திற்கு நான் விஜயம் மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன். அத்தோடு தற்போதைய கொரோனா  முன்னேற்பாடுகள் தொடர்பிலும்  ஆராய்ந்துள்ளேன். தற்போது வவுனியா மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும் மன்னார் மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பணிப்பாளரும் தங்களுடைய கடமைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தேன்.  அவருடன் கலந்துரையாடிய பின்னர் கோப்பாய் கொரோனா  சிகிச்சை நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினை தொடர்பில் கேட்டு, அதற்குரிய தீர்வையும்  வழங்கியுள்ளோம். உடனடியாக வழங்கக்கூடிய தீர்வுகளை வழங்கி இருக்கின்றேன்.

கொரோனா வைரஸ் மேலும் தீவிரமடைந்து மேலும் நோயாளர்கள் இனங்காணப்படும் போது, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சிகிச்சை நிலையங்களில் கட்டில்கள் எவ்வாறு அதிகரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இன்று அனைவரும் இணைந்து கலந்துரையாடியதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில்  ஏறத்தாழ 1000 கட்டில்களுடன் கூடிய  சிகிச்சை நிலையத்திற்கான ஒரு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த சந்திப்பில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் கேதீஸ்வரன் கூறுகையில் –

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை வழங்குவது, அதாவது சத்திர சிகிச்சை மேற்கொள்வது தொடர்பில் இன்றையதினம் ஆராயப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருடனும், கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல யாழ் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக  ஆலோசித்துள்ளதாகவும் தெரிவித்த மாகாணப் பணிப்பாளர் கேதீஸ்வரன் எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் அந்த நாளோ அல்லது அடுத்த ஒரு நாளில் வெளியிடக்கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்

முடக்கல் நிலை என்பதனை ராணுவத்தினர் சுகாதார பணியாளர்களால்  தீர்மானிக்கப்படுவது அல்ல,  அதாவது ஒரு கிராமத்தினை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பது அல்ல மக்கள்தான் தீர்மானிப்பது. மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி கொரோனா விருந்து தங்களை பாதுகாப்பதன் மூலம் , ஒரு கிராமத்தினை  அல்லது ஒரு கிராம சேவையாளர் பிரிவினை  முடக்க  வேண்டிய தேவை ஏற்படாது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி செயற்படுவதன் மூலம் மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Related posts: