போலி நாணயத்தாள்: அச்சகத்தில் பணிபுரியும் பெண் கைது!

Friday, June 24th, 2016

குடாநாட்டிலுள்ள வங்கியொன்றினால் வழங்கப்பட்டதாக கூறுப்படும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில் புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றில் பதினேழு பவுண் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் குறித்த பணத்தை திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இது தொடர்பான மேலதிகமான விசாரனைகளை மேற்கொள்வதற்காக வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே இன்று(24) யாழ்ப்பாணத்தில் தனியார் அச்சகத்தில் தொழில் புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: