பொய் கூறிப் பொருள்கள் சேகரித்தவர் மக்களிடம் மீண்டும் மாட்டிக்கொண்டார்!

Wednesday, January 9th, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களைச் சேகரிக்க அரச பிரதிநிதியாக வந்துள்ளேன் என்று பொய் கூறி வந்த நபர் ஒருவர்  இரண்டாவது தடவையாகவும் மக்களிடம் மாட்டிக் கொண்டார்.

இந்தச் சம்பவம் எழுதுமட்டுவாழ் தெற்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

ஏற்கனவே மட்டுவில் கல்வயல் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குமாறு கோரியமை தொடர்பாக தகவல் கிடைத்து மக்கள் உஷாரடைந்ததால் தலைமறைவான நபரே மீண்டும் மாட்டிக்கொண்டார்.

வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவென அரசினால் அனுப்பப்பட்டதாகக் கூறி அலுவலர் போல உடையணிந்து வந்த ஒருவர் எழுதுமட்டுவாழ் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் மக்களிடம் பணம் அறவிட்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் பணம் வசூலித்த இவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மக்கள் விசாரித்தபோது உண்மை வெளியாகியுள்ளது.

இதனால் பொதுமக்கள் இவரைப் பிடித்து கிராம அலுவலர் மூலம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 11 ஆயிரத்து 120 ரூபா பணமும் 2 அலைபேசியும் 3 அடையாள அட்டைகள் மற்றும் ஒரு சங்கிலி என்பன மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.