பேருந்து சேவைகள் சீரின்மை: வடமராட்சி கிழக்கு மக்களுக்கு பாதிப்பு!

Saturday, September 9th, 2017

வடமராட்சி கிழக்கு பகுதிக்கான பேருந்து சேவைகள் சீரின்மையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அரசாங்க அதிகரிகளுக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும், சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக காலை நேரத்தில் பேருந்து சேவைகள் சீரின்மையால் வடமராட்சி கிழக்கிற்குப் பயணிப்போர் பாடசாலைப் பேருந்து சேவையிலேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் இப்பகுதிக்கு அன்றாடம் கடமைகளுக்குச் செல்கின்ற மக்களும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்களும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை காலைநேர பாடசாலை சேவைப் பேருந்தை தவறவிடுவோர் உரிய நேத்தில் கடமைகளுக்கு சமுகமளிக்க முடியாமல் தவிப்பதாகவும், இதனால் புதுக்காட்டுச் சந்தியில் இருந்து முச்சக்கரவண்டிகளில் அதிகூடிய பணத்தை செலுத்தி செல்லவேண்டி உள்ளதாகவும் பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து அரச போக்குவரத்து அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்திய போதிலும், கடந்த 1 வருடத்துக்கும் மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இனியும் தாமதிக்காது இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:

அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சுறுத்தல் ; இலங்கையில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது – இராணுவத்...
தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் - கல்வி அமைச்சர் தினேஷ் குண...
நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!