பேச்சுவார்த்தை தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பேச்சவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. இதனால் தமிழ் முற்போக்கு முன்னணியினர் நாளை திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம் ஆகியோருக்கும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அபிவிருத்தி உபாய முறைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஆகியோருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தே முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டபின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் மாறாக தொழிலாளர்களுக்கு தோட்டங்கள் தோறும் 2 ஏக்கர் நிலமளவில் வழங்கி அதில் உப பயிர்ச்செய்கைகளை தொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு வசதி செய்வதாகவும் இதன் மூலம் தோட்டத்தொழிலாளர்கள் வருவாயை தேட முடியும் என்று முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனை முன்வைத்ததாகவும், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார்.
முதலாளிமார் சம்மேளனத்தினரின் இந்த யோசனையை சாதகமாக பரிசீலிக்க முடியும் என்றும் ஆனால் முதலில் இடைக்கால நிவாரணமாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சாதகமான பதில் கிடைக்காமையினால் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது என்று தமிழ் முற்போக்கு முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.
Related posts:
|
|