பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்: அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நடவடிக்கை!

கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் இலங்கை பூராகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானத்தினை மேற்கொள்ளும் விவசாய அமைச்சின் ஆலோசனைச் சபையின் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாக குறித்த இழப்பீட்டு காப்புறுதியினை வழங்க வேண்டுமென குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின் தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுகொண்டுள்ளார்.
அதற்கு அமைவாக கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டிற்கான காப்புறுதியாக முற்றாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கரிற்கு நாற்பதாயிரம் தொடக்கம் இழப்பீட்டினையும், ஏனைய பகுதியளவில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு பாதிப்பின் வகைக்கேற்ப இழப்பீட்டு காப்புறுதியினையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம்முதல் இழப்பீட்டு காப்புறுதியினை வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விவசாயிகளுக்கான இழப்பீட்டு காப்புறுதியினை எதிர்வரும் 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டபத்தடி, ஆயித்தியமலை, கரடியனாறு மற்றும் ஏறாவூர் ஆகிய நான்கு பகுதிகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை முதல்கட்டமாக வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|