புரட்டியெடுக்கும் வெயிலால்  வடக்கில் மக்கள் அவதி!

Friday, April 22nd, 2016

குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடாநாட்டில் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் வெயிலின் கொடூரம் அகோரமாகவுள்ளது. இதனால் அத்தியவசியப் பணிகளைத் தவிர்த்து வெளியில் செல்வதை குடாநாட்டு மக்கள் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.

வெயிலின் கொடூரத்திற்கு முகம்கொடுக்க முடியாது மக்கள் அவதிப்படும் நிலையில் ஒருசிலர் மாத்திரம் இதனால் பெரும் நன்மைகளை அடைந்து வருகின்றனர்.

நடைபாதை குளிர்பாண வியாபாரிகள், இளநீ வியாபாரிகள், ஐஸ்கிறீம் வியாபாரிகள் மற்றும் குளிர்பானங்களை விற்பனைசெய்துவரும் கடைக்காரர்களே அதிக நன்மை அடைந்துள்ளனர்.

ஒரு செவ்இளநீர் யாழ்ப்பாணத்தில் 100 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. குளிர்பானங்களும் அதனைவிட அதிக விலைக்கு விற்பனையாகின்றது. வெயிலின் கொடூரத்தை தாங்க முடியாததால் மக்கள் என்ன விலை கொடுத்தாவது குளிர்பானங்களையும் இளநீர்களையும் வாங்கி பருகிவருகின்றனர்.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பூச்சியம் தசம் 6 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக யாழ்.பிராந்திய வானிலை அவதான நிலையப் பணிப்பாளர் எஸ்.பிரதீபன் கூறுகின்றார்.

ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் உச்சத்தில் இருந்த சூரியன் நீங்கியுள்ள போதிலும் வெப்பநிலை உயர்வாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கமைய கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையானது 35 தசம் 7 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அது 36 பாகை செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது.

இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 0.6 பாகை செல்சியஸ் அதிகம் என யாழ் பிராந்திய வானிலை அவதான நிலையப் பணிப்பாளர் எஸ்.பிரதீபன் தெரிவிக்கின்றார்

Related posts: