புதுவருடத்தை முன்னிட்டு மின்தடை ரத்து!

Wednesday, April 13th, 2016

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் எவ்விதத் தடையுமின்றி மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக் காலப்பகுதியில், நிறுவனங்களுக்கான மின் விநியோகம் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படுவதால், மின் தடையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கொழும்பில் நேற்று(12) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதுஅவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14ஆம் திகதிகளில், எக்காரணம் கொண்டும் மின்சாரத்தடை ஏற்படுத்தப்படாது என்று உறுதியளித்த பிரதியமைச்சர், மின்நிலையங்களில் எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படக்கூடாது என தான் பிரார்த்தித்துக்கொள்வதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்..

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்:

மேலும் மூவர் கைது!

சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த மேலும் 8 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

மேற்படி சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிய ஐவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதான சந்தேகநபரின் அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: