புதிய இடத்தில் பொலிஸ் நிலையம்!

Friday, August 5th, 2016

விளான் பகுதியில், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட காணியில், இளவாலை பொலிஸ் நிலையத்துக்குரிய கட்டடப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய இடத்தில் இளவாலை பொலிஸ் நிலையம் இயங்குகின்றது.

புதிய கட்டடத்தில் சகல வசதிகளுடன் கூடிய உத்தியோகத்தர் தங்கும் விடுதி, முறைப்பாட்டு பிரிவு, சிறுவர்பிரிவு, போதை ஒழிப்பு பிரிவு, சமையல்கூடம், மலசலகூட வசதி மற்றும் கட்டளை பணியகம், ஆயுத அறை என்பன பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பழைய பொலிஸ் நிலையம் அமைந்த காணி, உரிமையாளர்களிடம் சட்ட ரீதியாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்..

கடந்த 1995ஆம் முதல் ஆண்டு இளவாலை பகுதியிலுள்ள தனியார் காணிகளை கையகப்படுத்தி இளவாலை பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டது. பொதுமக்களுடைய காணிகளை கையகப்படுத்தி வைத்திருந்த பொலிஸ் திணைக்களம் அதனை பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்காது கைவசப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து, காணி உரிமையாளர்களினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், உடனடியாக காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் பின்னர், பொலிஸ் நிலையத்துக்குரிய புதிய காணி, பண்டத்தரிப்பு, விளான் பகுதியில் 55 இலட்சம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்டு இந்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts: