புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்

Monday, July 3rd, 2017

புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதாக அமையும் என, எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் செயலாளரும், அரசியலமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதி விசேட நிர்வாக சேவை அதிகாரியுமான இவர், இந்த நாட்டு மக்களின் கருத்துகளை உள்வாங்கி முதன்முறையாக அரசியல் யாப்பு ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தினைப் போன்று இல்லாமல் தேசிய கட்சிகள் முதல் தடவையாக ஒன்றிணைந்து இந்த அரசியல் யாப்பினை உருவாக்குவதால், அதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்தறியும் நிகழ்வு வின்சன்ட் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமர் செயலகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், அம் மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த காலத்தில் பாராளுமன்றத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புகள் இந்த நாட்டுக்கு பயன்பட்டதாக நான் அறியவில்லை. அந்த அரசியல் யாப்புகள் இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தாத காரணத்தினால் அதனை தோல்வியான அரசியல் யாப்புகளாகவே நோக்க வேண்டியுள்ளது. மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, ஆளுனர்கள் நியமிக்கப்பட்டதை தவிர வேறு எந்த வெற்றியையும் அரசியல் யாப்புகள் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையாகும்.

சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்கள் வழங்கும் போதே நாட்டை முன்னேற்ற முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன கருதியதன் காரணமாகவே அந்த சட்டத்தினை உருவாக்கினார். ஆனால் அதனைக் கொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வினையும் காணவில்லை, நாட்டை முன்னேற்றவும் இல்லை.

மாறாக 30 வருட கால உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அதன்மூலம் பெற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, தற்போதைய அரசாங்கம், மக்களின் விருப்பங்களைக் கொண்டதாக புதிய யாப்பினை உருவாக்கி, அதன் மூலமாக அனைத்து இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற எண்ணத்துடன் ஒன்றுபட்டு பயணிக்கும் மற்றும் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் அரவணைத்து வாழும் நிலையினை ஏற்படுத்தும் வகையில், இந்த புதிய யாப்பினை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்து, மக்கள் ஆட்சி ஏற்படும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிலும் விசேடமாக வட, கிழக்கு மக்கள் அதற்கு அமோக ஆதரவளித்தனர்.

அதேபோன்று பிரதமரும் இந்த உறுதிமொழியை அளித்திருந்தார். அதனடிப்படையில், 2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்த வேளை, அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினை அரசியலமைப்பை உருவாக்கும் சபையாக மாற்றி, பாராளுமன்ற உறுப்பினர்களை குழுக்களாக அமைத்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக எதிர்கட்சி, ஆளும் கட்சி, சட்டவாதிகள் என, பல்வேறு தரப்பினரையும் கொண்ட, பிரதமர் தலைமையிலான 21 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இவ்வாறான பொதுமக்களை அறிவூட்டும் நடவடிக்கைகளை நாங்கள் அந்த குழுக்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.

சமய தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் புதிய அரசியலமைப்புக்காக தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர். 2016ம் ஆண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதான அறிக்கையினை கையளித்துள்ளோம். அதனை பாராளுமன்றத்தின் ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.

அந்த ஆறு குழுக்களிலும் உள்ளவர்கள் தலைவர்களாக உள்ள காரணத்தினால் குறித்த அறிக்கையில் உள்ள மக்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் சில எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்குள் நடைபெறும் விடயங்களை அவற்றிக்கு மாறாக மக்களிடம் தெரிவித்து வரும் நிகழ்வுகளை அவதானிக்க முடிகின்றது. இந்த ஆறு குழுக்களையும் இணைத்து பிரதானமாக இருக்கும் குழுவுக்கு தலைவராக இருப்பவர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பிரான இருக்கின்ற பந்துல குணவர்த்தவாகும். அவரை தலைவராக நியமித்தன் மூலம் இந்த குழுவின் உண்மைத் தன்மை வெளிப்படையாகவுள்ளது, என்றார்.

Related posts:


தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாத...
அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்க...
டொலர் கையிருப்பு குறைவடைவு - டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!