புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய 77 வயதான முதியவர் கைது!

Tuesday, April 4th, 2017

யாழ். தெல்லிப்பழைப் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய முதியவரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(02) தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புகையிரதம் சென்று கொண்டிருந்தது. இதன் போது தெல்லிப்பழைப் புகையிரதப் பாதுகாப்புக் கடவை மூடப்பட்டிருந்தது. கடவை மூடியிருந்த வேளையில் குறித்த கடவையூடாக முதியவரொருவர் மோட்டார்ச் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். இதனைத் தடுத்து புகையிரதக் கடவைக் காப்பாளர் குறித்த முதியவர் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிள் திறப்பினை எடுத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார்ச் சைக்கிளை ஓட்டிச் சென்ற முதியவர் புகையிரதக் கடவையாளரைத் தாக்கி விட்டு மோட்டார்ச் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய ஓய்வூதியரான சுன்னாகத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: