பிரதமரை பதவியிலிருந்து அகற்றும் எண்ணமில்லை – சுதந்திரக் கட்சி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமரை நியமிக்கும் நோக்கேமோ, தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்படவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதே எமது விருப்பம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நாம் வெற்றிபெறவே விரும்புவோம். கட்சி என்ற அடிப்படையில் எமது நோக்கமும் அதுதான். ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சியின் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவே நாம் விரும்புவோம்.
பிரதமரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. பிரதான இரு கட்சிகளும் இணைந்தமைக்கு காரணம் இருக்கின்றது. எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சியிலிருந்து சில ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும். எனினும் தனியாக ஒரு கட்சியால் சாதிக்க முடியாத, அல்லது அடைந்துகொள்ள முடியாத இலக்கினை அடைந்துகொள்வதற்கு சக்திமிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகவே இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.
இதுவே எமது நோக்கம். அதனை நாம் கைவிடவில்லை. இது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் இது. ஆகவே பிரதமரை வெளியேற்றி புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. மத்திய செயற்குழுவின் அனுமதிக்கு அமையவே தேசிய அரசாங்கத்ததை அமைத்துள்ளோம். டிசம்பர் மாதம் எமது ஒப்பந்தம் நிறைவடைகின்றது. ஆகவே அந்த சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென மீண்டும் பேசி தீர்மானிக்க முடியும். அந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு தீ்ர்மானத்திற்கு வரும். ஆகவே இரண்டு கட்சிகளும் மீண்டும் பேசி தொடர்ந்து பயணிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும்.“ என்றார்.
Related posts:
|
|