பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளார்கள் – கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் அமைச்சர் பந்துல கடும் எச்சரிக்கை!

Monday, July 24th, 2023

பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் அதை புறக்கணித்து புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிழக்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரயில்வே ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் முதலில் ரயில்வே பொது மேலாளருக்கு அவற்றை தெரியப்படுத்த வேண்டும். அவரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் போக்குவரத்து செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

இவர்களிடம் தீர்வு கிடைக்காவிட்டால் அமைச்சரவை செயலாளருக்கு அறிவிக்க வேண்டும். அவரிடமும் தீர்வு கிடைக்காவிட்டால் என்னிடம் கூற வேண்டும். துறைசார் அமைச்சராக, அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

அவ்வாறு ஒரு பொறிமுறையை கையாளாது புகையிரதத்தை கொழும்புக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் அது நியாயமற்றது. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடுமென தூய சிங்களத்தில் அவர்களுக்கு கூறியும் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஆனால், தனியார்மயப்படுத்துவதற்கு  பதிலாக அதனை ஒரு அதிகாரசபையாக மாற்றி மறுசீரமைக்க முடியும் என்றேன்.

இவ்வாறு கூறியும் அவற்றை பொருட்படுத்தாது போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கட்டாயம் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: