பாவனையாளர்கள் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்

Saturday, May 14th, 2016

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 10 வர்த்தகர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்றுமுன்தினம் (12) தீர்ப்பளித்தார்.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், விலைப் பட்டியல்  காட்சிப்படுத்தாத, காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் உரிய தரச்சான்றிதழ்கள் இன்றிப் பொருட்களை விற்பனை செய்த 10 வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டனர்.

அந்த வர்த்தகர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

காலாவதியான நூடில்ஸை விற்பனைக்குக் காட்சிப்படுத்தியவருக்கு 4,000 ரூபாயும், உத்தரவாதம் பெறப்படாத இலத்திரனியல் பொருள் கொள்வனவு செய்து விற்பனைக்குக் காட்சிப்படுத்தியவருக்கு 3,000 ரூபாயும், உத்தரவாதமற்ற சவர்க்காரம் காட்சிப்படுத்தியவருக்கு 4,000 ரூபாயும், விலை பொறிக்காமல் ரீசேட் காட்சிப்படுத்தியவருக்கு 4,000 ரூபாயும், காலாவதியான பொருள் விற்பனை செய்தவருக்கு 5,000 ரூபாயும், விலை காட்சிப்படுத்தாமலும் காலாவதியான உடல் கிறீம் காட்சிப்படுத்தியவருக்கு 5,000 ரூபாயும், அதிகூடிய விலையில் பொருள் விற்பனை செய்தவருக்கு 5,000 ரூபாயும், திகதி குறிப்பிடாது சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தவருக்கு 2,000 ரூபாயும், உத்தரவாதம் பெறப்படாத பொருள் விற்பனை செய்தவருக்கு 3,000 ரூபாயும், விலைக்காட்சிப்படுத்தாது புடவை வியாபாரம் செய்தவருக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts: