பாதிப்புகளுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது! -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Thursday, August 4th, 2016

இந்திய அரசாங்கத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதில் தொழில்வாய்ப்பு பெற்றோர்   இலங்கை சுகாதார சபையினால் பதிவுச்செய்யப்படாத நிலையில் அவர்களினால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்பையும் தாம் ஏற்க முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டள்ள நோயாளர் காவு வண்டி மக்களுக்கு முறையான சேவையை வழங்குமாக இருந்தால் அதனை நாம் எப்போதும் வரவேற்பவர்களாக இருப்போம். ஆனால் தற்போது முறையான சட்டத்திட்டங்களோ அல்லது அவர்களுக்கான ஒழுக்கக்கோவை மற்றும் விதிமுறைகள் தொடர்பிலோ தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.

அதாவது குறித்த நோயாளர் காவு வண்டிகள் நோயாளர்களின் அவசர மற்றும் தீவிர சிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படவுள்ளது. அவ்வாறான நிலையில் இலங்கையின் சுகாதார துறையில் அவர்களும் ஒரு பங்காளிகளாக உள்ளனர் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவர்கள் இலங்கை சுகாதார சபையினாலேயோ அல்லது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினாலேயோ முறையாக பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறெனில் அவசர தேவைகளுக்காக குறித்த நோயாளர் காவு வண்டிகளை நாடும் நோயாளிகளுக்கு ஏற்படும் அசைளரியங்கள் தொடர்பிலோ அல்லது நோயாளர்களின் சுகாதாரம் தொடர்பில் நாம் பொறுப்பேற்க முடியாது என்றார்.

Related posts: