நெடுந்தீவில் 5 வயோதிபர்கள் படுகொலை – பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைது என யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவிப்பு!

Sunday, April 23rd, 2023

நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிசார்  தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் குறித்த வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதை தொழிலாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நெடுந்தீவில் உள்ள ஆலயம் ஒன்றின் மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐந்து வயோதிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் குறித்த வயோதிபப் பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதேபோன்றே கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரும், கடந்த 19 ஆம் திகதி குறித்த வீட்டுக்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று அதிகாலை 5 – 6 மணிக்கு இடைப்பட்ட வேளையில், சந்தேகநபர் குறித்த 5 பேரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

பின்னர், அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க ஆபரணங்களையும் அபகரித்து, குறிக்கட்டுவான் பிரதேசத்துக்கு தப்பிச்சென்றுள்ளார் என்றும் புங்குடுதீவு பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாயும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கொலையானவர்கள் எவரும் உறக்கத்தில் கொல்லப்படவில்லை என்றும் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்பட்டதுடன், அவர்கள் தப்பியோட முற்பட்ட வேளையில் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொலை நடந்த வீட்டுக்கு, வழமையாக வந்துசெல்லும், பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, கொள்ளையிடப்பட்டதாகக் கருதப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரை இன்று (23) ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: