நூதன முறையில் அரச வங்கியில் திருட்டு!

Wednesday, September 14th, 2016

மிகவும் நூதன முறையில் அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.

எனினும் கடந்த 9 ஆம் திகதி வங்கி நடவடிக்கை ஒன்றுக்காக சென்ற போதும் அப்பணம் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது, மீண்டும் கடந்த 12 ஆம் திகதி வங்கி அட்டையைக் கொண்டு பணத்தை எடுக்க தன்னியக்க இயந்திரத்தில் செலுத்திய போது குறித்த கணக்கில் பணம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வங்கி முகாமையாளரை தொடர்பு கொண்ட போது இந்த கணக்கில் இருந்து வங்கி அட்டை மூலம் கொழும்பு, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தன்னியக்க இயந்திரம் மூலம் பணம் முழுமையாக எடுக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தனது வங்கிப்புத்தகம், வங்கி அட்டை என்பன தனது பாதுகாப்பில் இருந்த போதும் எவ்வாறு பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை குறித்த பண மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

02-1422864408-4-bank-600-jpg

Related posts: