நுண்கடன் பாதிப்பு – பாதுகாப்பதற்கான திட்டம் விரைவில்!

Wednesday, July 4th, 2018

நுண்கடன் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்களை பாதுகாப்பதற்கான திட்ட அறிவிப்பை மத்திய வங்கி இந்த மாதம் வெளியாக்கவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் நுண்கடன் திட்டங்களால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த பிரதமரும் உறுதிமொழியை வழங்கி இருந்தார்.

இதன்படி நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் அமைப்பு என்ற அடிப்படையில் மத்திய வங்கியின் தலையீட்டுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலான திட்டவரைபை மத்திய வங்கி இந்த மாதம் 22 ஆம் திகதி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: