நிலத்தடி நீரில் விவசாயத்தால் வற்றுகின்றன கிணறுகள்  -தென்மராட்சி தெற்கு மக்கள் கவலை!

Friday, January 20th, 2017

குளங்களில் காணப்படும் நீரை நெற்பயிர்களுக்குப் பாய்ச்சுவதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது  என தனங்களப்பு, அறுகுவெளி, மறவன்புலோ பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி தெற்கில் வயல்களுக்கு நடுவே 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அவற்றைவிட கடந்த ஆண்டு 50மேற்பட்ட குழாய்க் கிணறுகளும் வயல்களுக்கு நடுவே உருவாக்கப்பட்டன. விவசாயத்துக்குத் தற்போது போதியளவு மழை இல்லை.

குளங்களை அண்டிய வயல்களுக்கு குளத்து நீர் பாய்ச்சப்படுகின்றது. குழாய் கிணறு மூலமும் வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படுகின்றது. தற்போது குடியிருப்புப் பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் மட்டம் சடுதியாகக் குறைந்து வருகின்றது. இந்த நிலை நீடித்தால் நெல் அறுவடைக் காலத்தின் போது – எதிர்வரும் மார்ச் மாதமளவில் கிணறுகளில் நீர் முற்றாக வற்றும் நிலை காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் குளங்களில் நீர் நிறைந்து காணப்படும் போது கிணறுகளிலும் அதே அளவில் நீர்மட்டம் காணப்படும். கடந்த ஆண்டு இறுதியில் மழை பெய்யாததால் கிணறுகளின் நீர் மட்டம் உயரவில்லை. தற்போது நிலத்தடி நீர் வயல்களுக்கு இறைக்கப்படுவதால் கிணறுகளின் நீர் மட்டம் சடுதியாகக் குறைகின்றது. கடந்த நவம்பர் மாத முற்பகுதியில் மழை பெய்தது.

வயல்களில் நீர் நிரம்பி மேலதிக நீர் வாய்க்கால்களில் விடப்பட்டது. மழை வெள்ளம் கடலேரியுடன் கலக்காதவாறு தடுப்பணையில் உள்ள துரிசை அடைத்து தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் வெள்ள நீர் வீணாகக் கடலேரியுடன் கலந்தது. தற்போது தண்ணீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

zero-budget-iyarkai-vivasayam-yen-eppadi-1050x700

Related posts: