நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை வசூலிப்பதாகக் குற்றச் சாட்டு!

Wednesday, August 10th, 2016

நல்லூரில்  வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும்  பார்க்க அதிகளவில் பக்தர்களிடம் வசூலிப்பதாக யாழ். மாநகரசபைக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை(08) ஆரம்பமானது. ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு மாநகர சபையின் அனுமதியைப் பெற்று  வாகனத் தரிப்பு நிலையங்கள் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் துவிச்சக்கர வண்டிகளிற்கு ஐந்து ரூபாவும், மோட்டார்ச் சைக்கிள்களுக்கு 10 ரூபாவும் கட்டணமாக அறவிடப்பட வேண்டுமென யாழ். மாநகர சபை கேட்டுள்ளது. இந்த நிலையில் கொடியேற்றத் திருவிழா அன்றே சில வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சைக்கிளுக்குப் 10 ரூபாவும், மோட்டார்ச் சைக்கிளுக்கு 20 ரூபாவும் வசூலித்திருந்ததாக பக்தர்களால் யாழ். மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உடனடிச் சோதனையில் ஈடுபட்ட யாழ். மாநகர சபை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலித்தவர்களை கிடுமையாக எச்சரித்தனர்.

எனினும் ,நேற்றுச் செவ்வாய்க்கிழமை(09) மாலையும் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகைக் கட்டணத்தைச் சில வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் அறவிடுவதாகப் பக்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts: