நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் சிறையில் இருந்து தகவல் !

Monday, October 12th, 2020

நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், தான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது மகநூல் பதிவில்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

என்னுடைய சிறை வாசத்திற்கு நேற்றுடன் ஐந்து வயது நிறைவடைந்துவிட்டது. இதுவே நல்லாட்சி எனக்கு தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில் நயவஞ்சகமாக சிறைக்கு அனுப்பப்பட்டேன். இருந்தாலும் மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து – தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய (54198) விருப்பு வாக்குகளை அளித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தையும் வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்களது கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது.

எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தையும் உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி என அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: