நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத் திரண்ட பக்தர் கூட்டம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று (19) சிறப்பான முறையில் இடம்பெற்றது..
கருவறையில் எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நாகபூசணி அம்பாள், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் அசைந்தாடி வந்து முத்தேர்களிலும் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள், தேங்காய் அடிக்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியார்களின் அரோகராக் கோஷம் விண்ணைப் பிளக்க முத் தேர்களும் அடியவர்களால் வடம் தொட்டிழுக்கும் காடசி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
நூற்றுக் கணக்கான அடியவர்கள் கற்பூரச் சட்டிகள், காவடிகள், அங்கப் பிரதட்ஷணம், அடியளித்தல் முதலான நேர்த்திக் கடன்களைப் பகுதி பெருக்குடன் நிறைவேற்றினர். அம்பாள் இரதமேறும் அழகுத் திருக் காட்சி காண யாழ். குடாநாட்டிலிருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த புலம்பெயர் அன்பர்களும் அலைகடலெனத் திரண்டிருந்தனர்.
இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த- 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முத்தேர் பவனியும், இன்று திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்றது.
Related posts:
|
|