தேசிய பாதுகாப்புக்கு 1000 ஏக்கர் காணி வேண்டும் – இராணுவம்!
Sunday, September 11th, 2016
வலிகாமம் வடக்கில் தேசிய பாதுகாப்புக்காக 1000 ஏக்கர் காணிகளை தாம் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதி தருமாறு காணி ஆணையாளரிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இராணுவத்தின் வசமுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணியில் இந்த 1000 ஏக்கர் காணி அடங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் இராணுவத்தின் வசமுள்ள ஆயிரத்து 500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு தாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்னூடாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். மோதல்களுக்கு முன்னர் மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிகளையே இராணுவம் விடுவிக்கவுள்ளது.
முன்னதாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவுசெய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related posts:
|
|