தென்னை மரங்களுக்கு இடையில் தேங்காய் மட்டைக்குழி – வறட்சியை தடுக்க வழி இதுவே!

Wednesday, October 4th, 2017

தென்னை மரங்களை வறட்சியிலிருந்து மீட்பதற்குத் தேங்காய் மட்டைக்குழிகள் அமைப்பது சிறந்த வழி. அதனைப் பின் பற்றி வறட்சியிலிருந்து தென்னைகளைப் பாதுகாப்பதோடு உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்று தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தென்னை மரங்கள் பூக்கும் காலம் பெரும்பாலும் வருடத்தின் மார்ச் மற்றும் ஜுலை மாத காலப்பகுதிகளே. அந்தக் காலப்பகுதியில் தான் தென்னை மரங்களில் கருக்கட்டல் நடைபெறும். இந்தக் கருக்கட்டலுக்கு 27 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவான காலநிலையே தேவைப்படுகின்றது.

எமது மாவட்டததைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. இவ்வாறு வறட்சியான காலநிலை நிலவும் போது தென்னை மரங்களின் பூக்கள் உதிர்ந்து தேங்காய் உற்பத்தி குறைவடையும்.

இந்தப் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்கள் தங்களின் தென்னை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் எட்டு அடி ஆழத்தில் கிடங்கு வெட்டி அந்தக் கிடங்கின் அடியில் தேங்காய் மட்டைகளை நிமிர்த்தியபடி அடுக்கவேண்டும். அதன் பின்னர் மட்டைகள் மறையும் வரை மண் போட்டு மூட வேண்டும். அதன் பின்னரும் ஒரு தொகை மட்டைகளை நிமிர்த்தியபடி அடுக்க வேண்டும்.

அதன் பின்னர் மண்ணை நிரப்பி மூட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பொச்சு மட்டைகளாலான குழிகளை அமைப்பதன் ஊடாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் இறைக்கும் போது நிலத்தின் கீழ் உள்ள தேங்காய் மட்டைகள் நீரை அதிகளவில் உறிஞ்சி வைத்திருக்கும். அவ்வாறு தண்ணீர் உறிஞ்சி வைக்கப்படுவதால் வறட்சியான காலநிலையிலும் தென்னை மரத்திற்குத் தேவையான தண்ணீர் தொடர்ச்சியாகக் கிடைக்கும்.

தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காலநிலையே முக்கியகாரணம். அது மட்டுமன்றித் தேங்காய் உற்பத்தியாளர்களில் 70 வீதமானோர் தங்கள் உற்பத்திகளான தேங்காய்களைத் தமது தேவைகளுக்கே பயன்படுத்துகின்றனர். மிகுதி 30 வீதமே சந்தைக்கு வருகின்றன. இதனாலும் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றது -என்றார்.

Related posts: