துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது.- அமைச்சர் வஜிர அபேவர்த்தன

Monday, June 5th, 2017

இயற்கை அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் கனிந்திருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 வருடங்களில் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு ஒட்டுமொத்த மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் ஆதரவு அவசியம் என்று அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்பிரச்சினைகளை இனங்கண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் பிறந்துள்ளது. வெள்ளம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் ஜின்கங்கை, நில்வள கங்கை, களுகங்கை போன்ற ஆறுகளின் நீரை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முறையான திட்டம் இல்லாமையாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

1968ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் ஈசிஐ பொறியியல் அறிக்கைக்கு அமைய, வெள்ளத்தை கட்டுப்படுத்தவதற்கு மேற்கொள்ள வேண்டிய தீர்வுகள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைக்கு அமைய மகுறு அணை குக்குலே அணை, இரத்தினபுரி அணை உள்ளிட்ட ஆறு அணைகளை இந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் அமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று அமைச்சர் அபவேர்த்தன நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

Related posts: