தீவகத்தில் இருந்து மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி கடத்திய இருவர் கைது!

download (4) Monday, July 9th, 2018

ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை வடக்கு, நாரந்தனை, அல்லைப்பிட்டி, வேலணை கிழக்கு போன்ற பகுதிகளில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி கடத்திய இருவர் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட இருவரும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரிடமும் இருந்து 107 கிலோ மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை திருடி வெட்டிய மாட்டிறைச்சியுடன் இருவர் மோ.சைக்கிளில் யாழ் நகர் நோக்கிச் செல்வதை அவதானித்த பொலிஸார் அவர்களை நிறுத்த முயன்றனர். எனினும் மோ.சைக்கிளை நிறுத்தாமல் இவர்கள் வேகமாகத் தப்பியோடினர்.

எனினும் பொலிஸார் இவர்களை விரட்டி வந்தனர். வேகமாக வந்த மாடு திருடர்கள் இருவரும் மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரண் மேசையுடன் மோதி விபத்துக்குள்ளாகி விழுந்து காயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைதான இருவரும் தீவகப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் எனத் தெரியவருகின்றது. இவர்களுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.