திருமணங்களை நடத்த புதிய நடைமுறை தொடர்பில் வெளியான செய்தியை மறுத்துள்ள சுகாதார அமைச்சு!

Thursday, May 21st, 2020

திருமணங்கள் தொடர்பில் புதிய ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக சுகாதாரத்துறையின் சுற்றாடல் மற்றும் உணவுப்பாதுகாப்பு தொடர்பான உதவிப்பணிப்பாளர் லச்மன் கமலத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் சென்று பார்வையிடமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய காரணங்கள் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணங்களின்போது சமூக இடைவெளி பேணப்படவேண்டும். அத்துடன் வரும் விருந்தாளிகளின் உஷ்ண நிலை சோதனையிடப்பட வேண்டும் போன்ற ஒழுங்குவிதிகள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக லச்மன் கமலத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் திருமணங்களை நடத்த புதிய நடைமுறைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: