திருட்டுடன் தொடர்புடைய நால்வர் கைது!

Monday, April 25th, 2016

குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறியுடன் தொடர்புடைய நான்கு நபர்களை நேற்றுமுன்தினம் (23) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார்.

பிரதான சந்தேகநபர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில, பண்ணை பஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது திருடி விற்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருநகர் பகுதியினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இத் திருட்டுக்களின் பிரதான சந்தேகநபராக இனங்காணப்பட்டுள்ளார். அத்துடன் ஆஸ்பத்திரி வீதியினை சேர்ந்த பெண் ஒருவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

திருடி வரும் பொருட்களை விற்று பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 10 பவுண் நகை, பெறுமதியான 2 அலைபேசி, வாகனப்புத்தகங்கள் என்பன திருடப்பட்டிருந்தன.  இத் திருட்டினை மேற்படி 17 வயதுடைய இளைஞனே மேற்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. மேலும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி, 1½ இலட்சம் ரூபாய் பெறுமதியான புகைப்படக்கருவி, ஐ-பாட், 7 அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தற்போது நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்சிறுவன் சிறுவயதிலிருந்தே திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதன்போது கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தால் அச்சுவேலி பகுதியிலுள்ள சான்று பெற்ற சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: