திடீரென நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைக்குளம் வான் கதவுகள் திடீரென திறந்து விடப்பட்டதால் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள சுமார் 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் திட்ட முகாமைக்குழுத் தலைவர் கந்தையா யோகவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவிக்கையில் வான் கதவுகள் திடீரெனத் திறந்து விடப்பட்டு, 15 அடி தண்ணீர் ஒரே தடவையில் வெளியேற்றப்பட்டதால்தான் சுமார் 6,000 ஏக்கர் நெற்செய்கைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போகத்துக்கான நெற்செய்கையின் நெற்பயிர்கள் அழிந்து போயும், கட்டுகள் உடைந்து சேதமடைந்துள்ளன என்றார்
மேலும்,மகாஓயா, பதுளை போன்ற பகுதிகளில், அதிகளவு நீர் வீழ்ச்சி காணப்படுமாயின்,அப்பகுதி நீர் காட்டுப்பகுதி வழியாக எமது பகுதியை வந்து சேரும்;. ஆனால் உன்னிச்சையில் பெய்யும் மழையால்எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கடந்த 19, 20,21 ஆம் திகதிகளில் பதுளை, பண்டாரவளை போன்ற பிரதேசங்களில், கடும் மழை வீழச்சி காணப்பட்டது. அந்தவேளை உன்னிச்சைக்குளத்தில் 31.2 அடி தண்ணார் காணப்பட்டது. அக் குளத்து நீரை 28 அடி மட்டத்துக்குக் கொண்டுவருமாறு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் அதனை கருத்திற் கொள்ளவில்லை.
25-05-2018 அன்று அதிகாலை கூடுதலான தண்ணீர் போவதாகவும், மிக மோசமாகத் தண்ணீர் பரவுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்ததையடுத்து நான் அங்கு சென்று நேரில் பார்த்தேன். அப்பகுதி வீதிகள் வெள்ளத்தால் மூழ்கி காணப்பட்டதுடன், வீதிகள், விவசாய நிலங்கள் எல்லாம் ஒரே குளமாகவே காட்சியளித்தன என்றார்.
மிக சிரமத்துக்கு மத்தியில் உன்னிச்சைக் குளத்தடிக்குச் சென்ற போது, அங்கு நீர்;ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளோ, பொறியிலாளர்களோ, அல்லது காவலாளியோ அங்கு எவரும் இருக்கவில்லை. அவர்கள் நீரை யாருக்கும் அறிவிக்காமல் நீரை வெளியேற்றி சென்றிருக்கிறார்கள் என்பதை தான் புரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
எனவே, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளின் நடவடிக்கையால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர்களை இடமாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Related posts:
|
|