தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்- அமைச்சர் சுவாமிநாதன்!
Friday, July 1st, 2016
தமிழ் மக்களுக்கு எதிராக தான் எதனையும் செய்யவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா – சிதம்பரபுர முகாமில் வாழ்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி அமைச்சர், தமிழ் மக்களுக்கு தான் துரோகம் இழைத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பொறுப்புகளை ஏற்று, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் குறிக்கோள் என்றும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
30 வருட காலமாக அடிபணிந்து வாழ்ந்த தமிழ் மக்களுக்கு புத்துயிர் வழங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், அதற்கு ஏற்றவாறு திட்டங்களை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும், தான் தமிழ் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாகவும், தமிழ் மக்களுக்கு எதிர்ப்பாக எதனையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டுத்திட்டம், குடிநீர்த்திட்டம், மலசலகூடத் திட்டம் என பல்வேறு பிரச்சனைகள் தமிழ் மக்களுக்கு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை மனதில் வைத்தே, தான் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுயநலம் கருதி உழைக்கவில்லை எனவும் தனக்கு நாடாளுமன்றத்திலும் பத்திரிகையிலும் எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை தான் மறுக்கவில்லை என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|