தமிழகத்திலிருந்து 75 பேர் நாடு திரும்பவுள்ளனர்!

Saturday, August 6th, 2016

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை அகதிகள் 75 பேர் தமிழகத்திலிருந்து நாடு திரும்பவுள்ளனர்.

மூன்று குழுக்களாக இந்த அகதிகள் விமானம் மூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இவர்களில் 43 ஆண்களும், 32 பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேறவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அகதிகள் சுயவிருப்பின் பேரிலேயே நாட்டிற்கு வருகை தருவதுடன், அவர்களுக்கான விமான பயணச் சீட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன. அத்துடன் அகதிகள் நாட்டை வந்தடைந்தவுடன் அவர்களுக்கு மீள் சமூக ஒருங்கிணைப்புக்கான நன்கொடையாக 75 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இதுதவிர போக்குவரத்து மற்றும் உணவு அல்லாத பண நன்கொடைகளாக மேலும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலளர் சுட்டிக்காட்டியுள்ளார். 2011 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 4870 அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். மேலும் 64,000 பேர் இந்தியாவிலுள்ள 109 முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: