தனியார் பேருந்தால் கொழும்பு பயணிகள் பெரும் அவதி!

Friday, November 24th, 2017

பருத்தித்துறை – கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்து சேவை ஒன்றின்  தன்னிச்சையான செயற்பாட்டால் பெரும் அவதிப்படுவதாக பயணிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் தினமும் பாதிக்கப்படும் பயணிகளில் பலரும் தெரிவிக்கையில்;

பருத்தித்துறை – கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்து சேவை ஒன்று கடந்த பல வருடங்களாக சிறப்பாக இடம்பெற்று வந்தது. அந்தப் பேருந்து சேவைக்கென்றே நிரந்தர பயணிகள் கூட்டம் இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக இந்தப் பேருந்து சேவை உரிமை கைமாறிய பின்னர் பேருந்து சேவையில் பல குளறுபடிகளும்  பயணிகளை அவதிப்படுத்தும், அசௌகரியப்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

தினமும் பருத்தித்துறையில் இருந்து கொழும்புக்கு ஒரு சேவையையும் கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு ஒரு சேவையையும் நடத்தி வந்த முன்னாள் உரிமையாளர் அந்த சேவையை சிறப்பாக நடத்தி வந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் ஒரு நாளைக்கு பல சேவைகளை நடத்துவதாலேயே பல குளறுபடிகள், ஏமாற்று வேலைகள் இடம்பெறுகின்றன.

ஒரு இரவில் மட்டும் மூன்று சேவைகள் மூன்று நேர அட்டவணைகளில் இப் பேருந்து சேவைகள் மேற்கொள்கின்ற நிலையில் ஒரு நேரத்திற்குரிய பேருந்துக்கு குறிப்பிட்டளவு பயணிகள் சேராதவிடத்து அந்த பஸ் சேவையை இரத்துச் செய்து அந்தப் பயணிகளை அடுத்த பேருந்துக்கு சேவை மாற்றுகின்றனர். இது குறிப்பாக பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் போதே இடம்பெறுகின்றது.

உதாரணமாக பருத்தித்துறையிலிருந்து 6.30 மணிக்கு கொழும்பை நோக்கி புறப்படும் பேருந்து முன்பதிவு செய்தோரை அந்தப் பேருந்துக்கு போதியளவு பயணிகள் சேராது விட்டால் இரவு 9.30 மணிக்கு புறப்படும் பேருந்துக்கு மாற்றுகின்றனர். அதனைக் கூட நேர்மையாக பயணிகளுக்கு அறிவிப்பதில்லை. இதனால் 6.30 மணிக்கு பேருந்தை எதிர்பார்த்து வீதிகளில் காத்திருப்போர் பேருந்தைக் காணாது அவர்களின் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினால் வந்து கொண்டிருக்கின்றோம், பொலிஸ் மறித்து விட்டது, பயணிகள் சிலர் வரவில்லை அதனால் தாமதம் என்ற பொய்த் தகவல்களே வழங்கப்படுகின்றன.

இதனால் 6.30 மணிக்கு பேருந்துக்கு பதிவு செய்ததுடன் இரவு 9.30 மணிவரை வீதிகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி கொழும்பில் பணிபுரிவோர், விமானநிலையத்துக்கு செல்வோர், நேர்முகப் பரீட்சைக்குச் செல்வோர் இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு கொழும்புக்குச் செல்ல முடியாது பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு நான்கிற்கு மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சொகுசு பேருந்து சேவையை நடத்துகின்ற நிலையில் முன்னர் சிறப்பாக சேவையை வழங்கிய குறிப்பிட்ட இந்தப் பேருந்து சேவையாளர்களே இன்று பயணிகளை பெரும் அசௌகரியத்துக்கு உட்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்தத் தாமதம், ஏமாற்று வேலைகள் தொடர்ந்தால் தாம் பேருந்து சேவையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.

Related posts: