தகுதியான தொண்டருக்கு நேர்முகத்தில் முன்னுரிமை – சுகாதார அமைச்சு !

Saturday, February 9th, 2019

வட மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணி புரிந்தவர்களில் தகுதியானவர்கள் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு செய்யப்படும் நேர்முகத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படுவார்கள் என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாகப் பலர் பணியாற்றியுள்ளனர். இவர்கள் டெங்குக் களத்தரிசிப்பு, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, மருத்துவமனை போன்றவற்றில் ஒப்பந்த அடிப்படையில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள்.

அவர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் அந்த வேலையை நிரந்தரமாக மேற்கொள்ள முடியாது. அவர்கள் பணி புரியும் இடத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அதிக காலம் வேலை செய்தவர்கள் உள்ளனர். இவர்கள் ஒப்பந்தகாலம் நிறைவடைந்த பின்னர் வேலையற்று இருக்கின்றனர்.

அது தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அதனடிப்படையில் அரச தலைவர் செயலகம் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றியவர்களின் விபரங்களைத் தருமாறு மாகாண அமைச்சுக்குப் பணித்தது. சுமார் 800 பேரின் விபரங்கள் அனுப்பப்பட்டன. அதேவேளை தாமும் கடமையாற்றினோம் ஆனால் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் பெயர் விபரங்கள் இல்லை என்று நேற்று முன்தினம் நடைபெற்ற ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களுக்கு சுமார் 400 வரையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்புச் செய்யப்படும்போது சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றிய அதற்கான சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.

இது தொடர்பில் மாகாண ஆளநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: