சோரம் போனவர்களால் பேரம்பேச முடியாது – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Tuesday, April 11th, 2017

சோரம் போன தமிழ்த் தலைவர்களால் அரசுடன் பேரம்பேச முடியாமல் போனமையால்தான் எமது மக்களின் அரசியல் தீர்வு இற்றைவரை வெற்றுப் பேச்சாகவே உள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்தார்.

தொண்டமானாறு, கெருடாவில் அம்பிகை முன்பள்ளி வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வீராவேசப் பேச்சுக்கள் பேசிய கூட்டமொன்று, இன்றைய அரசின் பங்காளியாகவுள்ளது. அதிலும் சுகபோகங்களுக்காக பதவி மோகத்தில் திளைத்துள்ளது.

எமக்கு அபிவிருத்தி வேண்டாம் அரசியல் உரிமையே வேண்டும் என அன்று கூக்குரல் இட்டவர்கள், தாம் சோரம் போனவர்கள் அல்ல என்றெல்லாம் கர்ச்சித்தவர்கள் இன்று ஒற்றையாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பில்லை, பௌத்தத்திற்கே முதலிடம் என அரசியல் தீர்வு, அரசியல் திருத்ததில் வரைவுகள் உள்ள நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்க முண்டியடித்து வருகின்றனர்.

வடக்கு மாகாணசபை இதுவரையில் 336 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமையுடன் கூறிக் கொண்டாலும் எதையும் செயற்படுத்தாமல் ஓய்ந்து போயுள்ளது. இவ்வாறாக சோரம் போனவர்களால் பேரம்பேச முடியாது. எனவேதான் எமது மக்களின் அரசியல் தீர்வு வெற்றுப் பேச்சாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அம்பிகை சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில், பிரதம விருந்தினராக பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமாகிய திருமதி பாஸ்கரன் இந்திராணியும், சிறப்பு விருந்தினர்களாக கிராம உத்தியோகத்தர் யோகச்சந்திரன், சமுர்த்தி உத்தியோகத்தர் சுதாகரன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி இந்திரன் கைலாஜினியும் கலந்து கொண்டனர்.

Related posts: