சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தான முத்தேர் பவனியில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு

Friday, May 6th, 2016

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை (05-06-2016) வெகுவிமரிசையாக இடம்பெற்றது. அதிகாலை விநாயகர் வழிபாடு, எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன.

வசந்த மண்டபப்  பூஜையைத் தொடர்ந்து விநாயகர் , வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் , பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் தேருக்கு எழுந்தருளிய திருக் காட்சி இடம்பெற்றது. முற்பகல்-10.30 மணிக்கு முத் தெய்வங்களும் முத் தேர்களில் எழுந்தருளிய பின்னர் முற்பகல் -11 மணிக்கு பக்தர்கள் அரோகரக் கோஷம் எழுப்ப, ஆண் அடியவர்கள் ஒருபுறமும் , பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்க முத் தேர்களும் மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதமானது.  முத் தேர்களும் பிற்பகல் -12.45 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தன.

அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் , அடியழித்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். கொளுத்தும் வெயிலின் மத்தியில் முத் தேர்களும் பவனி வருவதற்காகவும் , அடியார்கள் அங்கப் பிரதட்சணம் , அடியழித்தல் போன்ற நேர்த்திக் கடன்களைச் சிரமுமின்றி மேற்கொள்ளவும் ஆலயத் தொண்டர்களால் ஆலயத்தைச் சுற்றி தண்ணீர்த் தாங்கி மூலம் நீர் தெளிக்கப்பட்டது.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும் . சுன்னாகம் சிவன் வீதியிலும் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன . அத்துடன் ஆலய மணி மண்டபத்தில் அடியார்களின் பசியைப் போக்கும் வகையில் தானத்தில் சிறந்த தானமாகிய அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேவேளை , ஆலயத்தின் இவ் வருட இரதோற்சவத்தில் சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்கள்  மற்றும் புலம்பெயர் நாடுகள் ஆகியவற்றிலிருந்து நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: