சிறையில் உள்ள தமிழ் சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமும், துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெற்றன.
மன்னார் பிரஜைகள் குழுவினர் விடுத்த அழைப்பையேற்று இந்த நிகழ்வு யாழ் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றது.
விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தடுத்து வைக்கபட்டிருப்பவர்களை விடுதலை செய்வதாக அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம் என இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களும் குற்றச்சாட்டுக்களின்றியும் வழக்கு தாக்கல் செய்யப்படாமலும் சிறைச்சாலைகளில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்களும, சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்காகப் போராட்டம் நடத்தி வருகின்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
சிலர் கடந்த 22 வருடங்களாக ஏக்கங்கள், நிராகரிப்புக்கள், அவமானங்கள் அருவருப்புக்களை சுமந்துகொண்டு, நடை பிணங்களாய், அரசியல் கைதிகளாய் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டில் ஆயுதக் கிளர்ச்சி செய்த ஜே.வி.பி யினருக்கு இரண்டு தடவைகள் பொது மன்னிப்பு வழங்க முடியுமென்றால், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாமைக்கான காரணம் என்ன என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை சமூகப்பிரச்சினையாகக் கருதி நல்லாட்சிக்கான இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முந்தைய ஆட்சியில் நீதித்துறையினால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மட்டும் பாராமுகம் காட்டுவதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
Related posts:
|
|