சிறப்பு கல்வித் தேவை பற்றி ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை!
Thursday, December 1st, 2016
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் பணிப்புரியும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை முகாமைத்துவத்தின் 78.9 சதவீதமானவர்களுக்கு, சிறப்புக் கல்வித் தேவை தொடர்பில் எந்தவொரு பயிற்சியும் வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு இந்த சிறப்புக் கல்வித் தேவை குறித்துத் தெரிந்து வைத்திருக்கவில்லை என்றும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் சிறப்புக் கல்வித் தேவை தொடர்புடைய கொள்கைள் தொடர்பில், 80 சதவீதமான ஆசிரியர்களுக்குத் தெரியாமல் உள்ளது என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது, கொழும்பு முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘இலங்கையின் கட்டாயக்கல்விச் சட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது. அத்தோடு, சிறப்புக் கல்வித் தேவையுடையோருக்கென்று பல்வோறான பாடசாலைகள் காணப்படுகின்றன. எனினும், நாட்டிலுள்ள 10.6 சதவீத சிறப்புத் தேவையுடையோரில், 4.6 சதவீதமானோரே, சிறப்புக் கல்வியைப் பெற்று வருகின்றனர். இது அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்ல முடியும் என்ற கருத்துக்கு எதிரான ஒன்றாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
‘இதேவேளை, இலங்கையில் 10,973 பாடசாலைகள் உள்ளன. அவற்றுள் 3,559 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 103 தனியார் பாடசாலைகள் உள்ளன. 2014ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் கணிப்பீட்டில், 4.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இலங்கையில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு கற்பிப்பதற்காக, 249,024 ஆசிரியர்கள் உள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகிலுள்ள அனைத்து சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கும் கல்வி புகட்டுவதற்காக, 1994ஆம் ஆண்டு சலமன்கா அறிக்கையில், இலங்கை 144 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|