சாவகச்சேரி வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் இட நெருக்கடி!  

Monday, February 20th, 2017

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொது மருத்துவப் பிரிவு விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு பெரும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நோயாளர்களுக்கு நிலத்தில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது.

தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த வாரம் பெய்த மழையையடுத்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள், விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் பொது மருத்துவ ஆண். பெண், சிறுவர் விடுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வார புள்ளி விபரப் பிரகாரம் தினமும் 40இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் டெங்குக் காய்ச்சல், உண்ணிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு 3தினங்களுக்கு மேல் காய்ச்சல் நிலை குறையாத நோயாளர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

விடுதிகளில் டெங்கு நோயாளர்களுக்கு என தனியான கட்டில் வசதிகள் இருந்த போதிலும் டெங்கு நோயால்  பீடிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் ஏனைய கட்டில்களில் தங்கவைக்கப்படுகின்றனர். அதனால் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டு நிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விடுதிகளின் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் –

தென்மராட்சிப் பிரதேசத்தில் ஏற்கனவே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் தொடக்கம் தென்மராட்சி பிரதேசம் மட்டுமல்ல பச்சிலப்பள்ளி, வடமராட்சி கிழக்கு, பூநகரி போன்ற பிரதேசங்களை சேர்ந்த நோயாளர்களும், விடுதிகளில் டெங்கு நோயாளர்களுக்கான கட்டில்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு விடுதியிலும் தலா 24 கட்டில்கள் வீதம் உள்ளதால். அதற்கு மேல் சேர்க்கப்படும் நோயாளர்கள் நிலத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் விடுதிகளில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 42ஆண்களும், 34பெண்களும், உண்ணிக்காய்ச்சலால் பீடிக்கபட்ட 13பேரும் சிகிச்சை பெற்றனர். இந்த மாதத்ததில் நேற்று முன்தினம்வரை டெங்கு நோயால் 38பேரும் உண்ணிக்காய்ச்சலால் 3பேரும் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

chavakachcheri-hospital

Related posts: