சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்போம் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளதுடன், இந்த சவாலான சூழ்நிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்காக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் முதல் நாள் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் தேசத்தைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தினை நனவாக்க கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பார்க்கிலும் அதிக பலனளிக்கும் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஒரு மாபெரும் முக்கிய நிகழ்வினை நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், நாட்டின் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய நிர்மாணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
படைவீரர்களின் நலனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற, உயிரிழந்த முப்படைவீரர்கள் மற்றும் பொலிஸாரைச் சார்ந்தவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குதல் மற்றும் திருமணமாகாத போர்வீரர்களின் பெற்றோருக்கு மாதாந்த உதவித்தொகை வழங்குதல் என்பவற்றை பாதுகாப்புச் செயலாளராக இருந்து நனவாக்க முடிந்தமைக்கு பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் ஜெனரல் குணரத்ன தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறுநடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களை ஆட்டிப்படைத்த போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடிந்தது, இது நமது தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை சார்ந்தது என்பது மறுக்க முடியாத குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தீவிரவாத குழுக்கள் மற்றும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தேசிய பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|