சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Friday, December 16th, 2016
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை கோரும் நாடளாவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்ட ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழில் சங்க முன்னணியின் ஏற்பாட்டில் திருகோணமலை அபயபுர சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நண்பகல் இடம்பெற்றிருந்தது.
நாடாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் கடந்த 28 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டமானது கட்டம் கட்டமாக நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட ஊழியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், ஏனைய ஊழியர்கள் சம்பள அதிகரிப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அடுத்த கட்ட ஆர்ப்பாட்டம் நாளை அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைக்கு தீர்வு எட்டப்பட்டவிடின் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Related posts:
|
|