சமுதாய சீர்திருத்த பணியை நிறைவேற்ற தவறியவர்களுக்கு சிறை!

download (1) Wednesday, July 11th, 2018

சமுதாய சீர்திருத்த பணி கட்டளையை நிறைவேற்ற தவறிய இரு நபர்களுக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று கட்டளையிட்டுள்ளது.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் இரு நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸார் கடந்த ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றத்தால் தண்டப்பணத்துடன் 200 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறும் கட்டளையிடப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் 100 மணித்தியாலங்கள் மட்டுமே சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என சமுதாயம் சார் சீர்திருத்த அலுவலரால் கடந்த தவணையின் போது நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் குற்றவாளிகள் இருவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

குற்றவாளிகள் இருவரும் தமது சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றில் சரணடைந்தனர். வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன், குற்றவாளிகள் இருவரும் சமுதாய சீர்திருத்த பணிக்கு ஒழுங்காக சமுகமளிக்காததுடன் நீதிமன்றுக்கும் சமுகமளிக்கவில்லை. அதனால் இருவருக்கும் 3 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு கட்டளையிட்டார்.


விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!
உரிமைகளை வலியுறுத்தி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
தவணைப் பணத்ததை கட்டத் தவறியதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிப்பு!
காக்கைத்தீவு மீன் சந்தையில் கட்டுமானம் தாமதம் - அடுத்தாண்டும் குத்தகைக்கு வழங்க முடியாத நிலை என சுட்...
வெளிநாடு செல்ல தடை - ஐக்கிய தேசிய கட்சி!