கொடிகாமத்தில் திடீர் சோதனை: மருந்து விசிறிய பழங்கள் சிக்கின!
Friday, October 21st, 2016
கொடிகாமம் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பவற்றில் சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினர் நேற்று காலை மேற்கொண்ட திடீர் சோதனையில் பாவனைக்கு உதவாத பழவகைகள் மற்றும் பொருள்கள் கைமாற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு கையாளும் நிலையங்களில் பணியாற்றியோருக்கும், திகதி காலாவதியான பொருள்களை வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களும் இனங்காணப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொடிகாமம் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் அ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான சுகாதார பொது பரிசோதகர்கள் குழு, சாவகச்சேரி பிரதேசசபை பணியாளர்கள் ஆகியோர் சோதனைகளை மேற்கொண்டனர். மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்டிருந்த பழவகைகள் 3 வியாபாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன. வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் திகதி காலாவதியான பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்களும், உணவு கையாளும் நிலையங்களில் பணியாற்றுவோரில் வெற்றிலை மென்று கொண்டும், முகச்சவரம் செய்யாமலும் காணப்பட்டவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts: