குழாய்க் கிணறுகளை புனரமைத்து குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
Thursday, January 19th, 2017நாட்டில் நிலவும் கடும் வரட்சியால் மார்ச் மாதம் வரை பயன்படுத்தக் கூடிய நீர் மட்டமே உள்ள நிலையில் நீர் வெட்டோ அல்லது மின்சாரத் துண்டிப்போ அவசரமாக மேற்கொள்ளப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும், மின்சாரசபையும் தெரிவித்துள்ளது.
நிலைமையைக் கவனத்தில் கொண்டு வீண் விரயங்களைத் தவிர்த்து நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இச்சபைகள் கோரிக்கை விடுத்துள்ளன. குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் பவுசர்கள் மூலம் நீர் வழங்கப்பட்டு வருவதுடன், 1500ற்கும் அதிகமான குளாய் கிணறுகளை புனரமைத்து நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், மின்சார உற்பத்திக்குத் தேவையான நீரில் 33 வீதமான நீர்மட்டமே இருப்பில் உள்ளதாகவும், பெப்ரவரி மாதமளவில் இந்த நீர்மட்டம் 10 வீதமாகக் குறைந்துவிடுமெனவும் இலங்கை மின்சாரசபை எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவிவரும் வரட்சியான காலநிலை தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நீர்ப்பாசன திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.ரட்னாயக்க, நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் சமன் வீரசிங்க, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் லலித் சந்திரபால உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார்: களுகங்கையின் நீர் மட்டம் வற்றியிருப்பதால் கடல்நீர் கலந்துள்ளது. இதனால் களுத்துறை மாவட்டத்தில் குழாய் நீரில் உப்புத் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு குடிப்பதற்கும், சமையல் தேவைகளுக்கும் 12 பவுசர்கள் மற்றும் 200 நீர்த்தாங்கிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. ஏனைய தேவைகளுக்காக வழமைபோன்று குளாய்நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
மார்ச் மாதம் இறுதிவரையில் குழாய் நீரை வழங்க முடியும். தடையற்ற நீர்விநியோகத்தை மேற்கொள்ள நாடு முழுவதிலுமுள்ள 1000ற்கும் அதிகமான குழாய் கிணறுகளை புனரமைக்கவிருப்பதுடன், புதிதாக 400 குழாய் கிணறுகள் அமைக்கப்படவும் உள்ளன. 30000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக் கிணறுகளை சுத்தப்பட்டுத்தி அவற்றின் தரம் சோதிக்கப்பட்டு மக்களுக்கு தடையின்றி தண்ணீர் பெற்றுக் கொடுக்கப்படும். மாத்தறை மாவட்டத்தில் குழாய் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் தடையின்றி குளாய்நீர் விநியோகிக்கப்படுகிறது. தற்பொழுதுள்ள நிலையில் நீர் விநியோகத்தை தடுக்கவேண்டிய தேவை இல்லை.
இந்த வாரம் முதல் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து தண்ணீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 33 வீதமான நீர் மட்டமே இருப்பில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தெரிவித்தார். பெப்ரவரி மாதம் ஆகும்போது இந்நீர்மட்டம் 10 வீதமாகக் குறைந்துவிடும் என்றும், கண்டி, ஹபரணை மற்றும் தென்பகுதிகளில் தடையற்ற மின்சாரத்தை வழங்க 60 மெகாவோட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தனியாரிடமிருந்து ஒரு அலகு மின்சாரத்தை 30 ரூபா முதல் 35 ரூபா வரையில் கொள்வனவு செய்துவருவதாகவும், இதனால் ஏற்படும் மேலதிக செலவீனங்களை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதாயின் ஒரு அலகுக்கு 35 ரூபா வீதம் செலவாகிறது. இவ்வாறான நிலையில் மின்சாரத்தை வீண்விரயம் செய்யாது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வெப்ப காலம் என்பதால் நாளொன்றுக்கு 40 மில்லியன் அலகிலிருந்து 45 மில்லியன் அலகுவரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண நாட்களைவிட வரட்சி காலங்களில் 8 வீத மின்பாவனை அதிகரித்துள்ளது. நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு வீண்விரயங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோரினார்.
Related posts:
|
|