குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறை!

Friday, April 1st, 2016

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரத்னத்திற்கு, ஒரு வருட சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் கேகாலை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குமார் குணரத்னம், நேற்று மீண்டும் கேகாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குடிவரவு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டவரான குமார் குணரத்னம், முன்னைய ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக அப்போதைய அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டிருந்தார்.

பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி, 30 நாட்கள் சுற்றுலா விசாவில் குமார் குணரத்னம் மீண்டும் இலங்கை வந்தார். இந்நாட்களில் அவர் இலங்கையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தெரிவிக்கப்பட்டபோதும், அவர் கட்சிசார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதோடுவீசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்தும் நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவரை நாடு கடத்துமாறு பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

எனினும் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றக் கூடாதென முன்னிலை சோசலிச கட்சியால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அவருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டில் தலைமறைவாக இருந்த குமார் குணரத்னம், கடந்த வருடம் நவம்பர் மாதம் மாதம் 4ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை குடியுரிமை கோரி அவர் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, குடியுரிமை சட்டத்தை மீறிய அவருக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்படக் கூடாதென, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் தெரிவித்ததோடு, வழக்கு முடிவடையும் வரை குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாதெனவும் அறிவித்தார். குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நூறு நாட்களை கடந்த நிலையில் அவரது ஆதரவாளர்களால் சத்தியாக்கிரக போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தமது மகனை விடுவிக்குமாறும் அவருக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து, குமார் குணரத்னத்தில் தாயாரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: